பெயர்:
அஞ்சல்:
போர் முடிவடைந்தாலும் சிறுவர்களுக்கு ஆபத்தான நாடாகவே சிறிலங்கா உள்ளது: ஐ.நா.வுக்கு புதிய அறிக்கை
Tuesday, 28 July 2009 22:11

போர் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், சிறுவர்களுக்கு ஆபத்தான ஒரு நாடாகவே சிறிலங்கா உள்ளது என சிறுவர்களைப் படைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிரான கூட்டமைப்பு (The Coalition to Stop the Use of Child Soldiers) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது.

பலாத்காரமாகப் படையணிகளுக்குச் சேர்த்துக்கொள்ளல், எழுந்தமானமாகத் தடுத்துவைத்தல் உட்பட பல்வேறு விதமான மனித உரிமை மீறல்களைச் சிறுவர்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக இந்த அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

சிறுவர்களும் ஆயுதப் பிணக்கும் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் செயற்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள கூட்டமைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு உடனடியாகச் செயற்பட வேண்டும் என சிறிலங்கா அரசை வலியுறுத்தியிருக்கின்றது.

வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள தடுப்புக்காவல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் பெருந்தொகையானவர்கள் சிறுவர்கள் என்பதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா மெனிக் பாம் முகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையிட்டும் இந்த அறிக்கை விபரித்திருக்கின்றது.

இந்த முகாமில் இருந்த நான்கு அல்லது ஐந்து சிறுவர்கள், சிறுமிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்களா என படையினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் ஒரு சிறுமி தான் விடுதலைப் புலிகளுடன் இரண்டு நாட்கள் இருந்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவர்கள் அனைவரும் அங்கிருந்து வேறு இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் அதன்பின்னர் கிடைக்கவில்லை.

"சிறிலங்காவில் பெரும்தொகையானவர்கள் காணாமல் போய் இருப்பதன் பின்னணியில் - இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் இருந்து இவ்வாறு சிறுவர்களும், வயதானவர்களும் அழைத்துச் செல்லப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது" என இந்தக் கூட்டமைப்பின் பணிப்பாளர் விக்ரோரியா போர்பேஸ் அடம் தெரிவித்திருக்கின்றார்.

அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களால் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்படுதல் மற்றும் பலவந்தமாக ஆட்சேர்ப்புச் செய்யப்படுதல் போன்றன தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூட்டமைப்புக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.