| இலங்கை விவகாரம் குறித்து ஹிலாரி இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் |
| Sunday, 19 July 2009 11:34 |
|
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார். மூன்று நாள் விஜயமாக நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்த அவர், கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெற்ற தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளார். இன்று புதுடில்லி செல்லும் அவர் இந்தியத் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவிருக்கின்றார் என்று அறியப்படுகிறது. இன்று அவர் நடத்தவிருக்கும் பேச்சு நிகழ்ச்சி நிரலில், இலங்கைத் தமிழ் பிரச்சினை விவகாரமும் இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று தினங்களுக்கு முன்னர், அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான கவுன்ஸில் கூட்டத்தில் பேசும்போது, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக ஹலாரி கிளின்ரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |