| வடமராட்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெண் பணியாளர் கொலை |
| Saturday, 27 June 2009 12:04 |
|
பருத்தித்துறை, கந்த உடையார் ஒழுங்கையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் வெள்ளிக்கிழமை அவரது சடலம் மீட்கப்பட்டதாக வடமராட்சி பொலிசார் தெரிவித்துள்ளனர். 33 வயதுடைய தெய்வேந்திரன் அபிராமி என்ற பெண் தொண்டு பணியாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த வியாழன் முதல் அவர் வெளியில் வராத நிலையில் அவரை காணவில்லை என சுற்றத்தார் பொலிசாரிடம் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டின் கதவை உடைத்த உள்நுழைந்த போது, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்கள் இறந்ததன் பின்னர், பருத்தித்துறையில் கந்த உடையார் ஒழுங்கைப் பகுதியில் அவர் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். அபிராமியின் சடலம் தற்போது பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலதிக விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாணத் தலைவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |