|
இலங்கையில் மோதலில் சிக்குண்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச்சபை வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையின் தற்போதைய மனிதாபிமான, மனித உரிமை நெருக்கடிகளுக்குத் தீர்வு காண் பதற்கு உடனடியாக முயல்வதன் மூலம் கடந்த காலத்தில் தனது பாராமுகத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை இனியாவது சரி செய்வதற்கு பாதுகாப்புச் சபை முன்வரவேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் நடமாட்ட சுதந்திரம் என்பவற்றை ஐ.நா. பாதுகாப்புச் சபை, வலியுறுத்த வேண்டும் என்றும் விடு தலைப்புலி சந்தேக நபர்களின் அடிப்படை மனித உரிமைப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தூதுவர்க ளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
இலங்கையில் மோதலில் சிக்குண்ட மக்களின் நிலை குறித்து பாதுகாப்புச் சபை காட்டிய அலட்சியம் பாரிய வரலாற்றுத் தவறாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இரு தரப்பினரதும் மோசமான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு மத்தியில் இது இடம்பெற்றது. எனினும் பாதுகாப்புச்சபை இந்த விடயம் குறித்து ஆராயக்கூடத் தவறியது. உத்தியோகப்பற்றற்ற பேச்சுகள் என்ற அடிப்படையில் மாத்திரம் இலங்கை விவகாரத்தை அணுகியதன் மூலம் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பதைப் பாதுகாப்புச்சபை தவிர்த்துக்கொண்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஏழாவது அறிக்கை மோதலின் போதும் தற்போதும் பொதுமக்கள் அனுபவித்த, தொடர்ந்தும் அனுபவிக்கின்ற துயரங்களை வலியுறுத்தியது. இருதரப்புகளும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளனமோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் மனித உயிர்கள் குறித்து வேண்டுமென்றே அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்ததன் மூலம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளன.
விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுடன் பொதுமக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதைத் தடுத்து வந்தனர். இலங்கை அரசும் மோசமான தவறுகளை இழைத்தது. இவை எவற்றையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என இலங்கை அரசு கூறுவதை மன்னிக்க முடியாது.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை எனப் பாதுகாப்புச் சபைக்கு மறுப்புத் தெரிவித்த போதிலும் அரச படைகள் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் அதிகமாகவுள்ள பகுதிகள், வைத்தியசாலைகள் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டன. எனினும் தொடரும் மனிதாபிமான, மனித உரிமை நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய தேவை பாதுகாப்புச்சபைக்குள்ளது. இதன்மூலம் தனது முந்தைய செயற்பாடின்மை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சிறிதளவுக்கு நிவர்த்தி செய்யலாம்.
சிறீலங்கா அரசாங்கம் நடத்தும் மூடப்பட்ட நலன்புரி முகாம்களில் 3 லட்சம் தமிழ் மக்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முழுக் குடும்பங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் தொழிலுக்கோ அல்லது உறவினர்களுடன் செல்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
|