பெயர்:
அஞ்சல்:
பாடசாலை முகாம்களில் இருந்து சுமதிபுரம் இடைத்தங்கல் நிலையத்திற்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் மாற்றம்
Tuesday, 23 June 2009 00:26

வவுனியா பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் நிலையங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் வவுனியா எல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுமதிபுரம் இடைத்தங்கல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த எண்ணிக்கையானவர்கள் இருக்கும் போது அவர்களின் நலன்களை விரிவான முறையில் சரியாகக் கவனிக்க முடியும் என்றும், இடைத்தங்கல் நிலையங்களில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் மனிக்பாம் பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கதிர்காமர் நிவாரண கிராமத்தில் மக்களுக்குரிய வசதிகள் மேம்படுத்தப்பட்டு, நிர்வாகக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய நிவாரண கிராமங்கில் அத்தகைய வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிவாரண கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், அவர்களுக்குரிய உணவு, குடிநீர், சுகதாரம், வைத்திய வசதிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை அதிகாரிகள் எதிர்நோக்கி வருவதாகவும், அங்குள்ள மக்களும் பல்வேறு கஷ்டங்களு்க்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே யாழ்ப்பாணம் கொடிகாமம் ராமாவில் இடைத்தங்கல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றுமொரு இடைத்தங்கல் நிலையத்திற்கு சுமார் ஆயிரம் பேர் வரையில் இடம் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு, 617 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக யாழ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்