| தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கொழும்பு பிரதம நீதிவான் முன் ஆஜர் |
| Monday, 22 June 2009 22:31 |
|
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் இவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்திருப்பதுடன், விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர், இவரை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் கோரினர். இதேநேரம் நீதவானின் கண்காணிப்புகு்கு உட்படுத்தும் பொருட்டே கனகரத்தினம் பா.உறுப்பினரை ஆஜர்படுத்தியதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தபோது, நீதிவான் பா. உறுப்பினரிடம் ஏதேனும் பிரச்சினைகள் உண்டா? என கேட்டார். அதற்குப் பதிலளித்த கனகரத்தினம் பா. உ. உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதாகவும், பிரச்சினைகள் எதுவுமில்லை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, சதாசிவம் கனகரத்தினம் பா. உறுப்பினரை புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைத்த பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராச்சி எதிர்வரும் 26 ம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான அனுமதியை வழங்கினார். இதேவேளை, கனகரத்தினம் பா. உறுப்பினரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கடந்த ஜுன் 10ம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 பா. உறுப்பினர்கள் கையொப்பங்கள் அடங்கிய கடிதத்தை சபாநாயகரிடம் அரியநேத்திரன் பா.உறுப்பினரால் கையளிக்கப்பட்டது. படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்ட மோதலின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு தகவல்கள் அங்கிருந்த சதாசிவம் கனகரத்தினத்துக்கு தெரியும் என்பதால் அவரை விடுதலை செய்வது இலங்கை அரசுக்கு சிக்கலைக் கொடுத்துவிடும் என்று கருதியே அவர் மீது அரசாங்கம் அவசரகால தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி தடுத்து வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |