பெயர்:
அஞ்சல்:
இராணுவத்தின் தெல்லிப்பளை “புனர்வாழ்வு” முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இளைஞோர்களின் விதி
Monday, 22 June 2009 21:10

வன்னியிலிருந்து வந்த, தற்போது இராணுவத்தின் தெல்லிப்பளை விசேட புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 300 பெண்களினதும் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்களினதும் விதியானது நிச்சயமில்லாததும் சோகமானதுமாகத் தொடர்கின்றது என்று, அவ்விடத்து அரசு சார்பற்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

அங்குள்ளோர்களில் 100க்கும் மேற்பட்டோர் 14 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டோரென்றும் அவர்களது கல்வித் தேவைகள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் இம்முகாமுக்கு விஜயம் செய்த கல்விசார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

யுனிசெவ் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கு இங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்களை விஜயம் செய்வதற்கு அனுமதி இல்லையென்று யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் யாழ்ப்பாண தடுப்பு முகாம்களில் இருந்து இராணுவத்தால் அண்மைக்காலத்தில் வலுக்கட்டாயமாக தெல்லிப்பளைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளால் இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டியே இவர்கள் தடுது;து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் பலர் சிறிலங்கா இராணுவத்தால் பாதுகாப்பு அரண்கள் அமைப்பதற்கும், சோதனைச் சாவடிகள் திருத்தியமைப்பதற்கும் மற்றும் வலிகாமம் இராணுவ முகாம்களைச் சுத்தம் செய்வதற்கும் பாவிக்கப்படுகிறார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே சமயம், தடுப்புக் காவலில் உள்ள கிட்டத்தட்ட 300 யுவதிகளை அங்கிருந்து யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகத்துக்கு மாற்றி, இராணுவத்தால் மறுக்கப்பட்டு வந்த கல்வி தொடர்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க, கல்வி அதிகாரிகள் முயற்சிகள் எடுப்பதாகவும் தெரியவருகிறது.