பெயர்:
அஞ்சல்:
சென்னை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க அனுமதியின்றி காத்திருக்கும் வணங்கா மண்
Monday, 22 June 2009 00:13

இலங்கையிலிருந்தும் திருப்பிய ஐரோப்பிய கப்பலான கப்டன் அலி என்ற 'வணங்கா மண்' கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியின்றி நடுக்கடலில் காத்து நிற்பதாக தெரியவருகிறது. இலங்கையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட 884 தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் மேற்படி கப்டன்அலி என்ற கப்பல் கடந்த 7 ஆம் திகதி நிவாரண பொருட்களுடன் பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டது.

இந்நிலையில் இலங்கையரசு நிவாரண பொருட்களுடன் வந்த கப்பலை ஏற்க மறுத்து நாட்டுக்குள் அனுமதிக்காது திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நிவாரண கப்பல் எங்கு செல்வது என்று தெரியாமல் சென்னையருகே நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ளது. மேலும் மத்தியரசின் அனுமதி கிடைக்காததால் நிவாரண கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய முடியவில்லை. அத்துடன் கப்பலில் உள்ள 13 ஊழியர்கள் போதிய உணவுப்பொருட்கள் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து சென்னை துறைமுக அதிகாரிகள் கூறுகையில், நிவாரணக்கப்பல் இன்னும் சர்வதேச எல்லையில்தான் இருக்கின்றது. அது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இதுவரை சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை. ஏதேனும் உதவிகள் கேட்டால் செய்துகொடுக்க துறைமுகம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்தனர்.

இதேவேளை வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரண பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதேவேளை, வணங்கா மண் கப்பலுக்கு சென்னை துறைமுகம் சார்பில் 200 லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சென்னையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள ஊழியர்கள் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12ஆம் தேதி முதல் நடுக்கடலில் இருந்த அந்த ஊழியர்கள் நிவாரணப் பொருட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமல் தவித்ததையடுத்து அவர்களுக்கு சென்னை துறைமுகம் சுமார் 200 லீட்டர் குடிநீர் வழங்கி உதவியுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், "அந்தக் கப்பல் சுமார் ஒரு வார காலத்துக்கும் மேலாகக் கடலில் நிற்கிறது. அதில் 15 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்கு குடிநீர் இல்லை என்றும் கடந்த 16ஆம் திகதி அவசரத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு மறுநாளே 200 லீட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் அந்த சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை. ஏதாவது உதவி கேட்டால் மனிதாபிமான அடிப்படையில் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

புதிய சிக்கல்...

பொதுவாக நிவாரண பொருட்களை அனுப்பும் போது அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற பட்டியல் மற்றும் சில ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது வணங்கா மண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. மேலும், நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தூதரகம் மூலமாகவோ அனுப்புவது வழக்கம். ஆனால், இலங்கையில் தவிக்கும் மக்களுக்கு விரைவாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தமிழர்கள் நடைமுறையில் உள்ள சில சம்பிரதாயங்களை கவனிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. சில ஆவணங்களை சேர்த்து இணைக்காமல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் வணங்கா மண் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வர, ஆவணங்களைச் சரி பார்க்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த கப்பல் தொடர்பாக கியூ பிராஞ்ச் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-வீரகேசரி