பெயர்:
அஞ்சல்:
அனைத்துலக நாணய நிதியம் கைவிட்டால் நாங்கள் உதவுவோம்: சிறிலங்காவுக்கு இந்தியா ஆறுதல்
Monday, 22 June 2009 00:02

சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்கையை முன்வைத்திருந்தது.

வடக்கு போர் மற்றும் அரசியல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரித்தானிய நாடுகள் முதலில் அதற்கு எதிர்பார்ப்பை வெளிக்காட்டியிருந்த போதிலும் பின்னர் அந்த எதிர்ப்பினை பின்வாங்கிக் கொண்டன.

எனினும், தற்போதைய நிலையில் காணப்படும் ரூபாவின் மதிப்பைக் குறைக்காத பட்சத்தில் நிதியுதவியை வழங்க முடியாதிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கூறி வருகின்றது.

நாணய நிதியத்தின் அறிவிப்பின் பிரகாரம் டொலரின் பெறுமதி 122 ரூபாவை தாண்டும் பட்சத்தில் கடன் உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அந்த யோசனையை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இதன் மூலம் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் உதவி தடைப்படுமானால் இந்தியாவிடம் இருந்து அந்த உதவியை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகி இருப்பதாக அந்த அரசின் உயர்மட்டப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: தினக்குரல்