பெயர்:
அஞ்சல்:
கொக்கரிக்கும் சிங்களத்திற்கு நாம் ஓய்ந்து விடவில்லை; மாறாக வீறு கொண்டுள்ளோம்: 'உயிர்தெழுவோம்' நிகழ்வில் கனடியத் தமிழ் இளையோர்
Sunday, 05 July 2009 20:32

கனடியத் தமிழ் மக்களால்  நேற்று சனிக்கிழமை மாலை ஐந்து மணி முதல் ஒன்பது  மணி வரை ஒன்டாரியோ பாராளுமன்றத்தின் முன்றலில் ''உயிர்த்தெழுவோம்'' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் உணர்ச்சி பூர்வமாக  கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வதை முகாம்களில் வாழும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை விடுவித்து, மீண்டும் அவர்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியேற்ற வேண்டியும்,

போர் குற்றங்களில் ஈடுபட்ட ராஜபக்ச சகோதரர்களையும் இராணுவ அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றளில் நிறுத்த வேண்டியும்,

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமுகம் அங்கீகரிக்க வேண்டியும் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வு  மாலை ஐந்து மணியளவில் மங்கள விளக்கேற்றல், கனடியத்  தேசிய கீதம், தமிழீழ தேசிய கீதம் மற்றும்  அமைதி வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.

அத்துடன் வானம்பாடிகளின் உணர்ச்சிப் பாடல்கள், காசியானந்தனின் கவிதை, ஈழத்தமிழரின்  சுயநிர்ணய அரசிற்கு ஆதரவு வழங்கும் வேற்றின அமைப்பு பிரதிநிதிகளின்  பேச்சுக்கள் என்பனவும் இடம்பெற்றன.

மேலும் கனடிய உயர்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களால் ஈழத்தமிழினத்தின் விடிவுக்கு கனடிய தமிழரின் பங்கும் அதன் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்  சமுகத்தின் பலம் பற்றியும், தமிழீழ தேசியம் உருவாக கனடிய தமிழ் மாணவர்கள் உழைக்க வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்கள்.

இறுதியாக தமிழீழ தேசிய சின்னங்களுக்கு  உரிய முறையில் மதிப்பளித்தல்,
ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குதல், 
வதை முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்களை விடுவித்தல்,
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆட்சியை அங்கீகரிக்கும் வரை தமிழீழ தேசிய தலைவரின் வழிகாட்டலில் மாவீர்களின் கனவுகளை சுமந்தபடி போராடுதல்,
உட்பட பன்னிரண்டு உறுதிமொழிகள் கனடிய தமிழ் இளையோரால் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து இயக்குனர் சீமானின் பேச்சுடன் உயிர்த்தெழுவோம் நிகழ்வு முடிவுபெற்றது.