பெயர்:
அஞ்சல்:
கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பின் முதல் பொதுக்கூட்டம்
Monday, 22 June 2009 21:34
ஆனி மாதம் இருபத்தொராம் நாள் ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பின்முதல் பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இந்நிகழ்வு மாலை ஐந்து மணியளவில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அமைதி வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.



கனடாவில் வசிக்கும் அனைத்துத் தமிழ் மாணவர்களையும் மற்றும் இளையோரையும் ஒன்றாக ஒரு குடையின் கீழ் இணைத்து தமிழீழத் தேசியத்தை நோக்கிப் பயணிப்பதே கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பின் பிரதான பணியாகும். தமிழ் இளையோர் மத்தியில் தமிழருடைய பாரம்பரிய கலை பண்பாட்டை மேம்படுத்தல், விளையாட்டு துறையை மேம்படுத்தல், கல்வி மற்றும் கல்வி சார் தொழில் வாய்ப்புகளை ஏற்படுதல், மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் எழுப்புதல் மற்றும் தமிழீழ தேசியத்தின் பால் அபிவிருத்தியை துரிதப்படுதல் என ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கி கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.



இந்த நிகழ்வில் ஒவ்வொரு துறையையும் சார்ந்த பிரதிநிதிகள் தமது திட்டங்களையும் கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பில் தமது பணிகளையும் பற்றி உரையாற்றினார்கள்.



தமிழீழத்தில் சிங்களப் படையெடுப்புகளால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து கனடாவில் அருங்காட்சியம் ஒன்றை நிறுவுதல் மற்றும் தமிழீழத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய செயற்பாடுகளை துரிதப்படுதல் ஆகிய இரண்டு பிரதானமான செயல் திட்டங்களை கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பு தற்போது முன் வைத்துள்ளது.

தமிழ்தேசியத்துக்காகப் போராடும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு தனது செயற்பாட்டின் ஒரு பகுதியாக தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், அவ்வொற்றுமைக்குப் பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் சில சக்திகளின் செயற்பாட்டில் தமிழ் இளையோர் வீழ்ந்து விடாமல் இருக்கவும், தமிழ் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் என உறுதியெடுத்துக் கொண்டது.