|
Wednesday, 08 August 2007 00:23 |
|
தமிழர் நாள் 2007 கனடா தமிழ் இளையோர் அமைப்பினரால் கனடாவின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவான "வொன்டர்லான்"டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது
கோடை காலத்தில் தமிழ் மக்கள் ஒன்று கூடும் இந்த நிகழ்வின் நுழைவுச்சீட்டு 50சதவீத தள்ளுபடியுடன் விற்பனையானது. கிட்டத்தட்ட 200 விதமான களிப்பூட்டும் சவாரிகள், பலவிதமான தமிழீழ உணவு வகைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இந்த நிகழ்வு கோடைகாலத்தின் குதூகலமாக எமது மக்களுக்கு அமைந்திருந்தது. காலை 10 மணியளவில் பூங்கா மக்கள் வரவிற்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருந்தொகையான தமிழ் மக்கள் வரத்தொடங்கினர். மாலை 6:30 மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த மேடைநிகழ்வுகள் கிங்க்ஸ்டன் வெளியரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கனேடிய மற்றும் தமிழீழத் தேசிய கீதங்களுடனும், தமிழீழ மண்மீட்புப் போரில் வீரகாவியமான எமது மாவீரர்களுக்கும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்குமான அகவணக்கத்துடனும் ஆரம்பமானது. தமிழரின் வரலாற்றைக் கூறும் நாடங்களும், நடனங்களும், மற்றும் இசை நிகழ்சிகளும் மேடையில் அரங்கேறின. இந்த நாளின் முடிவில் 'வொன்டர்லான்ட்' நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்து நினைவுக் கேடயம் கையளிக்கப்பட்டது.
தமிழர் நாளானது 'வொன்டர்லான்டினால்' அங்கீகரிக்கப்பட்ட 18 கலாச்சார நாட்களில் ஒன்றாகும். ஆனால் இவ்வருடம் இது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டது. அந்த 7 நாட்களில் தமிழருக்கான 'தமிழர் நாளும்' சிறப்பான திட்டமிடல், நிகழ்ச்சி அமைப்பு, மக்களின் வருகை என்பற்றின் அடிப்படையில் இடம்பிடித்துள்ளது என்பதைக் கனேடிய தமிழ் இளையோர் அமைப்பு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது. 


|